துர்வாச முனிவரின் சாபத்தினால், வருணனின் மகனான வாருணி ஆட்டின் தலையையும், ஆனையின் உடலையும் பெற்றான். தனது தவறுக்கு வருந்தி, சாப விமோசனம் கேட்க, அவரும் இத்தலத்திற்கு வந்து சிவபூஜை செய்து வழிபட்டால் சாப விமோசனம் கிடைக்கும் என்று கூற, அவனும் அவ்வாறே செய்து சாபம் நீங்கப் பெற்றான். அதனால் வழிபட்டதால் இத்தலத்திற்கு 'திருஆடானை' என்னும் பெயர் உண்டானது. இத்தலத்து மூலவரும் 'ஆடானைநாதர்' என்று அழைக்கப்பட்டார். சூரியன் நீல ரத்தினக் கல்லால் சிவலிங்கம் அமைத்து வழிபட்டதால் இத்தலத்து மூலவர் 'ஆதிரத்தினபுரீஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.
மூலவர் 'ஆதிரத்தினபுரீஸ்வரர்', 'ஆடானைநாதர்' என்னும் திருநாமங்களுடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'சினேகவல்லி', 'அன்பாயியம்மை' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.
பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, வள்ளி தேவசேனை சமேத சுப்பிரமண்யர், நடராஜர், சண்டேஸ்வரர், பைரவர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.
அகத்தியர், மார்க்கண்டேயர், காமதேனு, அர்ஜுனன் ஆகியோர் வழிபட்ட தலம்.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|